மேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது ரி20 போட்டியில் 25 ஓட்டங்களினால் இலங்கை தோல்வியடைந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன் படி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தொடக்க வீரர் லென்டி சிம்மன்ஸ் ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களை (51 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். கடைசிக்கட்டத்தின் அன்ரூ ருஸல் 35 ஓட்டம் (14 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), பொலார்ட்34 ஓட்டங்கள் (15 பந்து, 3 சிக்சர், 2 பவுண்டரி) விளாச மேற்கிந்தியத்தீவுகள் பெரிய இலக்கை எட்டியது.
பந்து வீச்சில் லசித் மாலிங்க, இசுரு உதான, லக்க்ஷான் சந்தகன் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர். இலங்கையின் ஆறு பந்து வீச்சாளர்கள் வீசினர். அனைவரும் ஓவருக்கு 8 ஓட்டங்களிற்கு மேல் வாரி வழங்கினர்.
பதிலுக்கு 197 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 25 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
அவிஷ்க பெர்னாண்டோ 7, குசால் பெரேரா 0, கசுன் ஜயசூரிய 0, மத்யூஸ் 10, சனக 0 என தொடக்கமே இலங்கை நெறுங்கி விட்டது. 56 ஓட்டங்களிற்குள் 5 விக்கெட்டை இழந்தது. குசல் பெரேரா, ஹசரங்க ஜோடிதான் இலங்கையை கௌரவமான இலக்கிற்கு கொண்டு வந்தது.
பெரேரா 66 ஓட்டங்கள் (38 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), ஹசரங்க 44 (34 பந்து, 4 பவுண்டரி) பெற்றர்.
மூன்றாவது அதிகூடிய ஓட்டம் உதிரிகளாக கிடைத்த 19 ஓட்டங்கள்.
பந்து வீச்சில் ஓஷேன் தோமஸ் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அவரே ஆட்டநாயகன்.
இரண்டு போட்டிகள் கொண்ட ரி20 தொடரில், 1-0 என மேற்கிந்தியா முன்னிலை பெற்றுள்ளது.