இலங்கையில் இந்த நாட்களில் தாக்கம் செலுத்தி வரும் அதியுயுர் வெப்பநிலை காரணமாக பல்வேறு சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் தாக்கங்களுக்கு உள்ளானவர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இந்த அதியுயர் வெப்பத்துடனான காலநிலையால் ஏற்படும் நோய்த்தாக்க நிலைமை குறித்து விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது, கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் சுற்றாடல் மற்றும் தொழில் சுகாதார பிரிவு மருத்துவர் இனோகா சுரவீர, போதுமான அளவு சுத்தமான குடிநீரை பொதுமக்கள் அருந்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை அதியுயர் வெப்பநிலை நிலவுகிறது. எனவே, குறித்து சந்தர்ப்பங்களில் வெளியே நடமாடும்போது, குடை அல்லது தொப்பியை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தளர்வான ஆடைகளை அணிய வேண்டும் என்றும் சுகாதார அமைச்சின் சுற்றாடல் மற்றும் தொழில் சுகாதார பிரிவு மருத்துவர் இனோகா சுரவீர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.