ஐக்கிய தேசியக்கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர, சமரச முயற்சியில் ஈடுபட ராஜித சேனாரத்தவின் உதவியை ரணில் விக்கிரமசிங்க நாடியுள்ளார்.
இதன்படி, கட்சிப் பிரமுகர்களுடன் ராஜித பேச்சு நடத்தி வருகிறார். இதன்படி, ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஐ.தே.கவிற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட இரு தரப்பு தலைவர்களிற்கிடையிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
நேற்று நடந்த ஐ.தே.க செயற்குழு கூட்டத்தில், உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கை யோசனையை மலிக் சமரவிக்ரம முன்மொழிந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு அன்னம் சின்னம் வழங்கப்படுவதென்றால், தனக்கு கூட்டணியின் துணைத்தலைவர் பதவி தரப்பட வேண்டுமென ரவி கருணாநாயக்க இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அன்னம் சின்னத்தின் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் செயலாளர் ஷர்மிளா பெரேரா, ஐக்கிய மக்கள் படையின் துணைச் செயலாளர் பதவியை கோரியுள்ளார்.
செயற்குழு கூட்டத்தின்போது, பதவிகளை கோரி நெருக்கடியை ஏற்படுத்தாமல் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வீழ்த்த செயற்பட வேண்டுமென மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பொதுத்தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை கரு ஜெயசூரியவிடம் வழங்கும் யோசனையும் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும், செயற்குழு கூட்டத்தில் மலிக் சமரவிக்ரம இதை கடுமையாக ஆட்சேபித்தார்.
இரு தரப்பும், புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதே பொருத்தமானது என ரணில் விக்கிரமசிங்கவை அவர் வலியுறுத்தினார்.
இருதரப்பிற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால், அன்னம் சின்னம் தெரிவுசெய்யப்படலாமென தெரிகிறது.