காதலிக்க மறுத்ததால் 8ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அமைந்தகரை, பகுதியில் வசித்து வருபவர் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி. நேற்றிரவு இவரது வீட்டுக்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதையடுத்து மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்துள்ளனர். இதனைக்கண்ட அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
உடனே காயமடைந்த மாணவியை மீட்டு அக்கம்பக்கத்தினர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக அமைந்தகரை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அதே வீட்டின் கீழ்த்தளத்தில் வசித்து வரும் நித்யா என்ற இளைஞர் அந்த மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும் ஆனால் அந்த இளைஞரின் காதலை ஏற்க மாணவி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற இளைஞர் மாணவியின் கழுத்தை அறுத்து அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய இளைஞரை தேடி வந்தனர். இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்ற அந்த இளைஞரை அனைத்து மகளிர் போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
கைது செய்தவரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.