திருச்சியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் நர்ஸ் விஷம் குடித்தார். இதையடுத்து அவரது காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிகிச்சையில் இருந்த காதலியும் இறந்தார்.
திருச்சி புத்தூர் மூலக்கொல்லையை சேர்ந்த அமீர்கானின் மகன் சிராஜ்தீன் (28). இவர் பெயிண்டராக பணியாற்றி வந்தார். திருச்சி கல்லாங்காடு பகுதியை சேர்ந்த முரளியின் மகள் மேனகா (25). இவர் புத்தூர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சிராஜ்தீனுக்கும், மேனகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டின் பெற்றோருக்கும் தெரியவந்தது. மேலும் இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மேனகா கடந்த 27-ந் தேதி எலி பேஸ்ட்டை (விஷம்) சாப்பிட்டார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அவர் பணியாற்றிய மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. காதலி விஷம் குடித்து தகவல் அறிந்த சிராஜ்தீன் மனவேதனையில் இருந்து வந்தார். அவரது சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தும் வந்தார்.
சிராஜ்தீன் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல வேலைக்கு சென்றார். பின்னர் இரவில் வீடு திரும்பிய சிராஜ்தீன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புத்தூர் அரசு மருத்துவமனை போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காதலி விஷத்தை தின்றதால் சிராஜ்தீன் தற்கொலை முடிவை எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேனகா நேற்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தினர். காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் மேனகா மனவேதனையில்விஷத்தை சாப்பிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.