தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு தமிழ் அகதிகளின் விடிவிற்காக ஈழத்தமிழச்சி ஒருவர் ஜெனீவா சென்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் 12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஈழத்தை சேர்ந்த மாணவி ஒருவரே அவுஸ்திரேலியாவிலிருந்து ஜெனீவாவில் தற்போது இடம்பெற்றுவரும் கூட்டத்தொடரிற்கு சென்றுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பத்து ஆண்டுகளாக தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் இருவர், மனிதாபிமானமற்ற முறையில் கொடுமையான வாழ்வுக்குள் சிக்குப்பட்டுள்ளதை, சர்வதேச சமூகங்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக, அவரது பயணம் அமைந்துள்ளது.
மெல்பேனில் உள்ள மைற்றா தடுப்புமுகாமில் உள்ள இருவரையும், கடந்த சில வருடங்களாக சந்தித்துவந்த அவர், அவர்களது காலவரையற்ற தடுப்பு முகாம் வாழ்வை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.
இந்நிலையில் அவை எதும் பயனளிக்காத நிலையில் தற்போது ஜெனிவா சென்றடைந்துள்ள மாணவி, சித்திரவதைகள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான விடயங்களை கண்காணிக்கும் விசேட அதிகாரி நில்ஸ் மெல்சர் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களுக்கான துணை ஆணையர் ஜிலியன் றிக்ஸ் மற்றும் முக்கிய ஐ.நா அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
அத்துடன் வியாழக்கிழமை ஐ.நா மனித உரிமை சபையின் அமர்விலும் கலந்துகொண்டு, குறித்த அகதிகளின் விடுதலை தொடர்பாக உரையாற்றவுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் 12 ஆம் தரத்தில் கற்கும் உயர்தர கல்லூரி மாணவியான றேணுகா இன்பகுமார் என்ற ஈழத்தை சேர்ந்த மாணவியே இந்த முயற்சியில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.