ஜெயலலிதாவின் சமாதியை பார்ப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் 6-வது நாளாக அதிகாலை 4 மணி முதலே ஜெயலலிதா சமாதியில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
காலை 9.30 மணி அளவில் நடிகை திரிஷா தனது தாயுடன் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த வந்தார். திரிஷா மட்டும் போலீசாரின் பாதுகாப்பு அரண்களை தாண்டி ஜெயலலிதா சமாதி அருகே அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டார். அவர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றி வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர் சமாதி அருகே விழுந்து கும்பிட்டார்.
பின்னர் நடிகை திரிஷாவும், அவரது தாயையும் போலீசார் பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.