தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் நிலவுவதால், அவரது உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என பெங்களூரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் வலியுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக நரசிம்ம மூர்த்தி ‘தி இந்து’ விடம் கருத்து வெளியிடுகையில்,
கடந்த செப்டம்பர் மாதம் வரை நலமுடன் இருந்த ஜெயலலிதா திடீரென இரவில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
சாதாரண காய்ச்சல், நீர்ச்சத்து குறைப்பாடு, ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என முதலில் சொன்னார்கள். அடுத்த சில தினங்களில் வெளிநாட்டு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளித்தார்கள்.
அவரது உடலுக்கு என்ன பிரச்சினை என வெளிப்படையாக அறிவிக்காததால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி இரவு திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது.
இதேவேளை 70 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததுடன் உடல்நிலை முற்றிலும் தேறிய ஒருவருக்கு எப்படி திடீரென மாரடைப்பு வரும்? என சந்தேகம் எழுந்தது.
கடந்த 5ஆம் திகதி அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
செல்வி ஜெயலலிதாவின் உடலை அவசர அவசரமாக மறுநாள் மாலையே அடக்கம் செய்துள்ளனர்.
மேலும் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் வெளி ஊர்களில் இருந்து வந்துகொண்டிருந்த நிலையில் உடனடியாக அடக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால், அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். நரசிம்ம மூர்த்தி எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.