பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
லண்டனின் பல சுப்பர் மார்க்கெட்டில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைரஸ் தொற்றுக்கு அச்சமடைந்த பொதுமக்கள், பொருட்களை வீடுகளில் சேமித்து வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்காரணமாக திடீரென ஏற்பட்ட பொருட்களின் விற்பனை அதிகரிப்பு காரணமாக, பல பொருட்கள் உரிமையாளர்களால் பதுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை லண்டனிலுள்ள பல தமிழ் கடைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதாகவும் தமிழர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஒரு பக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபுறத்தில் அத்தியாவசிய பொருட்கள் இன்மையால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா பீதி உள்ள போதிலும், மொத்தமாக பொருட்களை வாங்க வேண்டாம் என்று பிரித்தானிய சுகாதார துறை மக்களை வலியுறுத்தியுள்ளது.
கடைகளில் உள்ள பொருட்களை கொண்டு செல்லும் சிலர் அதனை இணையத்தளங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்து மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த அச்ச நிலைமையை பயன்படுத்தி சில உணவு உட்பட அத்தியாவசிய பொருள் உற்பத்தியாளர்கள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதற்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.
கொரோனா பீதியைப் பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனங்கள், விலையை உயர்த்தினால் குறித்த நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்று சந்தை ஆணையம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அவசர நிலையை பயன்படுத்தி பாரிய அளவு பணம் மோசடி செய்யப்படுவதாகவும் பலர் இதில் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.
இணையத்தில் முகக் கவசங்கள் தொகையாக பெற முயற்சித்த நபர் ஒருவர் 15000 பவுண்ட்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பெப்ரவரி மாதம் முதல் கொரோனா வைரஸை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பாக 21 சம்பவங்களை தேசிய மோசடி புலனாய்வுப் பணியகம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது.
கொடிய வைரஸ் பரவுவதால் மோசடிகளின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், மக்கள் இதனை பயன்படுத்தி விரைவாக பணம் சம்பாதிப்பதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதனால் அவதானமாக இருக்குமாறு பிரித்தானியா மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களின் இயல்புவாழ்க்கை இதனால் பாதிக்கப்படுவதாக ஊடகங்களில் வெளிவரும் காணொளிகள் சுட்டிக்காட்டும்போதிலும் கொரொனா வைரஸ் மிக வேகமாக பரவுவதனால் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போவதைத் தவிர்க்குமாரூம் பேரூந்துகள், ரயில்களில் பயணிப்பதையும் கூடுமானவரை தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் மிக மிக அத்தியாவசியமான பொருட்களான மருந்துகளை வாங்கும் பொருட்டும், ஏனைய பொருட்களை வாங்குவதற்காகவும் கடைகள் திறக்கும் முன்னரே கடை வாசல்களில் காத்திருப்பதையும் பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.