ஆனால் இந்த ஒரு தகுதிக்கு அவர் கொடுத்த விலை அதிகம். அனுபவித்த வலிகளும் அதிகம். பிரஜின் பிரபல தொலைக் காட்சிகளில் நடிகராக வலம் வந்தவர். அலுவலக வேலைபோல போய் கைநிறைய சம்பளம் பெற்று வாழ்ந்தவர். ஆனாலும் அங்கேயே தங்கி விடவில்லை.
தன் இலக்கு சின்னத்திரை அல்ல பெரியதிரை என்று உணர்ந்து கொண்ட அவர், திரைவாய்ப்புகள் தேடத் தொடங்கினார். இன்று ஒருபடத்தின் முழு நாயகனாக நிற்கிறார். இந்நிலையில், தன்னை பலருக்கும் தெரிந்தும் வாய்ப்பு தர தயங்குகிறார்கள் என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, 2003-ல் டிவிக்குப் போன நான் நான்கு ஆண்டுகள் மட்டுமே அங்கே இருந்தேன். 2007-ல் வெளியே வந்து விட்டேன். நான் டிவி யிலிருந்து வெளியே வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழில் இதுவரை 3 படங்கள் வந்துள்ளன. இடையில் மலையாளத்தில் 4 படங்கள் நடித்தேன். பிருத்திவிராஜ், லால் படங்களும் அதில் அடங்கும்.
இடைப்பட்ட காலத்தில் போராட்டங்கள் தான். ஆனாலும் போராடியே நமக்கான இடத்தை அடைவது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் மனதை திசை திரும்ப விடவில்லை சின்னத்திரையிலிருந்து சினிமாவில் நடிக்க வருவதில் சாதகமும் உண்டு. பாதகமும் உண்டு.
டிவி மூலம் எல்லாருக்கும் தெரிந்திருப்பதாலேயே வாய்ப்பு தரத்தயங்குவார்கள். என்னை எல்லாருக்கும் தெரியும். ஆனால் வாய்ப்பு தரமாட்டார்கள். இது ஒரு மாதிரியான சிக்கல். சிலர் இவருக்கு என்ன வியாபார மதிப்பு இருக்கிறது? என்பார்கள். இதற்கிடையே நான் 2007 ல் திருமணம் செய்து கொண்டேன். என் மனைவி ஒரு சின்னத்திரை நடிகை. அவர் என்னையும் என் இலக்கையும் புரிந்து கொண்டிருப்பதால் ஆதரவு தந்து பக்கபலமாக இருந்தார். இது சாதாரண விஷயமல்ல.” என்கிறார்.
பிரஜின் நடிப்பில் தற்போது குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் படம் வெளிவர தயாராக இருக்கிறது. இதைத் தொடந்து ‘மிரண்டவன்’ என்ற படமும் வெளிவர தயாராக இருக்கிறது. சமுத்திரகனி நடிக்கும் ‘ஆண் தேவதை’ படத்தை இரண்டாவது நாயகனாக நடித்து வருகிறார். இன்னொரு படம் ஒன்றிலும் நடிப்பதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.