இணையதளத்தில் தகவல்களை சேகரித்து, கோவில் திருவிழாக்களில் நகைத் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் பற்றிய அதிர்ச்சி தகவல் போலீஸ் விசாரணையில் வெளியாகியுள்ளது. அவர்கள் மூவரும் தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் கடந்த 4ம் தேதி நடந்தது. தேரோட்டத்தின்போது, கூட்டநெரிசலை பயன்படுத்தி 10 பேரிடம், 35 சவரன் நகை திருடப்பட்டது.
போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். தேரோட்டம் நடந்த வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். இதில், சந்தேகத்துக்கு இடமான வகையில் அப்பகுதிகளில் சுற்றி வந்த மூன்று பெண்கள் நகைகளை திருடியது தெரிந்தது.
இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட, சென்னை திருவான்மியூரை சேர்ந்த சின்னத்தம்பி மனைவி செல்வி (36), ரஞ்சித்குமார் மனைவி பராசக்தி (36), பாண்டியராஜன் மனைவி இந்துமதி (27) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 20 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.
போலீசார் கூறுகையில்,’உறவினர்களான மூவரும், இந்தியா முழுவதும் நடக்கும் கோவில் விழாக்கள் குறித்து இணையதளங்கள் மூலம் தகவல் திரட்டுகின்றனர். ‘தொடர்ந்து விழாக்கள் நடக்கும் பகுதிக்கு சென்று நோட்டமிட்டு, கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபடுவர். தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம் நடந்த போது திருட்டில் ஈடுபட்டுள்ளனர்’ என்றனர்.