தெலுங்கானாவில் மருமகனை ஆணவக்கொலை செய்த மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அது குறித்து அவர் மகள் அம்ருதா பேசியுள்ளார்.
அம்ருதா என்ற இளம்பெண்ணும், பிரணய்குமார் என்ற இளைஞரும் காதலித்து வந்தனர்.
இவர்களின் காதல் விவகாரத்தை அறிந்த அம்ருதாவின் தந்தையான கோடீஸ்வர தொழிலதிபர் மாருதி ராவ் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஏனெனில் நாம் உயர்ந்த சாதி என்பதால், தாழ்ந்த சாதியை சேர்ந்த பிரணய்குமார் என் மருமகனாக வருவதற்கு ஒப்பு கொள்ள மாட்டேன் என கூறினார்.
ஆனால் தந்தையின் மிரட்டலை மீறி அம்ருதா காதலனை கரம் பிடித்தார்.பின்னர் 2018ல் அவர் கர்ப்பமாக இருந்த போது கணவர் பிரணய்குமாருடன் மருத்துவமனைக்கு வந்தார்.
அப்போது கூலிப்படையை சேர்ந்த ஆட்கள் பிரணய்குமாரை வெட்டி கொன்றனர். இதற்காக மாருதி ராவ் கூலிப்படைக்கு ரூ 1 கோடி கொடுத்தது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து மாருதி ராவை பொலிசார் கைது செய்த நிலையில் பின்னர் ஜாமீனில் அவர் வெளியில் வந்தார்.
இந்த சூழலில் கடந்த 29ஆம் திகதி அவருக்கு சொந்தமான ஷெட்டில் ஒரு சடலம் கிடந்தது, இதையடுத்து பொலிசார் மீண்டும் மாருதி ராவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் மாருதி ராவ் இன்று அவரது பண்ணை வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார், அவர் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து பேசிய அவர் மகள் அம்ருதா, என் கணவர் கொல்லப்பட்ட பின்னர் நான் என் தந்தை மாருதி ராவுடன் தொடர்பில் இல்லை.
அவருடன் நான் அதன் பின்னரே எந்த சூழலிலும் பேசவில்லை.
மாருதி ராவ் விடயத்தில் சரியாக என்ன நடந்தது என்பது குறித்து எங்களுக்கு இன்னும் சந்தேகம் உள்ளது.
அவர் இறந்த செய்தியை ஊடகங்கள் மூலமாக மட்டுமே நாங்கள் தெரிந்து கொண்டோம். எங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என்பதால் நான் இதுகுறித்து மேலும் பதிலளிக்க முடியாது என கூறியுள்ளார்.