அவுஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றியுள்ளது.
அவுஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என அவுஸ்திரேலிய அணி வென்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே தொடரை 2-0 என வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, அவுஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய அந்த அணியில் லபுஷேனை தவிர வேறு யாருமே பொறுப்பான இன்னிங்ஸ் ஆடவில்லை.
தொடக்க வீரர் வார்னர் வெறும் 4 ரன்னில் நோர்ட்ஜேவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
லபுஷேன் ஒருமுனையில் சிறப்பாக ஆட, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஷார்ட்டும் நன்றாக ஆடினார். இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 81 ரன்களை சேர்த்தனர். ஷார்ட் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் லபுஷேனுடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷும் சிறப்பாக ஆடினார். 32 ரன்களுக்கு மார்ஷும் ஆட்டமிழந்தார். கேரியும் சோபிக்கவில்லை.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மறுமுனையில் தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்திய லபுஷேன், ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்தார்.
இதையடுத்து 50 ஓவர் முடிவில் அவுஸ்திரேலிய அணி 254 ரன்கள் எடுத்தது. 108 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 108 ரன்களை குவித்த லபுஷேன், கடைசி ஓவரின் 5வது பந்தில் ஆட்டமிழந்தார்.
இதற்கடுத்து 255 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 45.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.