கொவிட் 19 தொற்று காரணமாக இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் இத்தாலியில் 133 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன் அங்கு 14 மாகாணங்களில் 366 பேர் பலியாகியுள்ளதுடன் 7 ஆயிரத்து 375 பேர் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், இத்தாலியில் லொம்பர்டி உள்ளிட்ட 14 மாகாணங்களில் வாழும் 16 மில்லியன் பேரை தனிமைப்படுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தடைகள் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளையும் இத்தாலி அரசாங்கம் விதித்துள்ளதுடன், பாடசாலைகள், இரவு நேர விடுதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொவிட் 19 தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் 107 நாடுகளில் 3ஆயிரத்து 792 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்த்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொவிட் 19 தொற்றினை தடுக்கும் நோக்கில் இலங்கை, பங்களதேஸ், பிலிப்பைன்ஸ், இந்தியா, சிரியா, லெபனான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து குவைட் நோக்கி பயணிக்கும் விமான சேவையினை ஒருவார காலத்திற்கு ரத்து செய்வதற்கு குவைட் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, குவைட்க்கான விமான சேவைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.