கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 6 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,500 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் சீனாவில் இருந்தபோது அங்கிருந்த வந்த கேரளத்தைச் சேர்ந்தவர்களுக்கு தீவிர சிகிச்சையும், மருத்துவக் கண்காணிப்பும் இருந்ததால் அவர்கள் குணமடைந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் பத்தினம்திட்டாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இத்தாலி சென்றுவிட்டு, தோஹா வழியாக கொச்சி வந்தனர். தங்களின் பயணத்தை யாரிடமும் கூறாமல் பத்தினம்திட்டா வந்துவிட்டனர்.
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களோடு பழகிய உறவினர்கள் இருவருக்கு கொரோனா இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 5 பேரும் மருத்துவமனைகளில் தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஐரோப்பிய நாட்டிலிருந்து தனது பெற்றோருடன் திரும்பிய 3 வயதுக் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்துக்குப் பின் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசிய போது,
“கேரளாவில் ஏற்கெனவே 6 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இத்தாலியிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என 11 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
மேலும், ஐரோப்பிய நாட்டிலிருந்து தனது பெற்றோருடன் வந்த 3 வயதுக் குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அந்தக் குழந்தையின் பெற்றோரும் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஒட்டுமொத்தமாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
149 மருத்துவமனைகளில் 1,116 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே 3 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டனர். அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால், ஒன்றாம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேசமயம், 9, 10 மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுகள் நடக்கும். மாணவர்கள் யாருக்கேனும் கொரோனா வைரஸ் தாக்குதல் கண்காணிப்பில் இருந்தால் அவர்கள் தனி அறையில் தங்கவைக்கப்பட்டுத் தேர்வு எழுத வைக்கப்படுவார்கள்.
அனைத்துக் கல்லூரிகளுக்கும் இந்த மாதம் இறுதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதரஸாக்கள், கல்லூரிகள் ஆகியவையும் மாத இறுதிவரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமண விழாக்கள் நடத்தத் தடையில்லை. அதேசமயம், மக்கள் அதிகமான அளவில் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல சபரிமலைக்குப் பக்தர்கள் அதிகமாகச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.