இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினி. தென்னிந்திய சினிமா மட்டுமில்லாது பாலிவுட்டும் கொண்டாடும் மிகப்பெரிய கலைஞர் அவர். இந்நிலையில், பாலிவுட்டில் அமீர்கானின் கடுமையான உழைப்பில் உருவாகியிருக்கும் ‘தங்கல்’ படத்தை ரஜினிக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பிப்பதற்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தார் அமீர்கான்.
ரஜினி, தனுஷ் உள்பட அவரின் குடும்பத்தார் அனைவருக்கும் ‘தங்கல்’ படத்தை திரையிட்டு காண்பித்தார். படத்தை பார்த்து முடித்துவிட்டு அப்படத்தில் சிறப்பாக நடித்திருந்த அமீர்கானை பாராட்டினார். அவர் அந்த கதாபாத்திரத்திற்காக மெனக்கெட்டிருப்பதை குறிப்பிட்டு பாராட்டினாராம்.
இதனால், மனம் குளிர்ந்த அமீர்கான், ரஜினியிடம் வரும் 23-ந் தேதி வெளியாகவிருக்கும் ‘தங்கல்’ படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு தன்னுடைய குரலுக்கு ரஜினியை டப்பிங் கொடுக்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். ஆனால், ரஜினியோ, உங்களுடைய தோற்றத்துக்கு என்னுடைய குரல் சரியாக பொருந்தாது என்று அவருடைய வேண்டுகோளை அன்போடு மறுத்தாராம்.
பிறகுதான், வேறொருவரை வைத்து தமிழில் டப்பிங் செய்து வெளியிடவிருக்கிறார்களாம். தங்கல் படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.