உலகெங்கும் இதுவரை 4,600 பேரை பலிவாங்கியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முனைப்பில் பிரித்தானியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன.
பிரித்தானியாவில் தற்போது மருத்துவமனை ஒன்று, கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில், தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு சுமார் 3000 முதல் 4000 பவுண்டுகள் வரை ஊக்கத்தொகை அளிக்க முன்வைந்துள்ளது.
இதில் தெரிவு செய்யப்படும் முழு ஆரோக்கியமான இளைஞர்களின் உடலில் கொரோனா கிருமியை செலுத்தி சோதனை மேற்கொள்ள உள்ளனர்.
சோதனைக்காக தற்போது இந்த மருத்துவமனையில் பல ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்துள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக 24 பேர் குறித்த மருத்துவமனையால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அடுத்த ஒரு சில மாதங்களில் சோதனை முன்னெடுக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஆராய்ச்சி மருத்துவமனையை செயல்படுத்தி வரும் மருத்துவரும் ஆய்வாளருமான Andrew Catchpole, இது கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் துரித நடவடிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பதிவு செய்துள்ள தன்னார்வலர்களுக்கு நேரடியாக கொரோனா கிருமியை செலுத்தமாட்டோம் என தெரிவித்துள்ள அவர்,
ஆனால் கொரோனா கிருமியின் OC43 மற்றும் 229E ஆகிய பாதிப்பில்லாத கிருமியை செலுத்தி சோதிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சோதனையில் வெற்றிபெற்றால், அடுத்தகட்டமாக கொரோனாவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை சோதனைக்கு உட்படுத்த இருப்பதாக Andrew Catchpole தெரிவித்துள்ளார்.
கடந்த 2001 முதலே செயல்பட்டுவரும் இந்த ஆய்வு நிறுவனத்தில், கொரோனா ஆய்வுக்கு மட்டும் 10,000 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.