ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கடுமையான பகிடிவதைக்குள்ளாகிய மாணவனின் மூளையில் சிதைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந் சம்பவத்தில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்தார்.
பகிடிவதைக்கு உள்ளான மாணவன் மீது டயரை தூக்கி எறிந்த மாணவன் உள்ளிட்ட அதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையே கைது செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கடந்த 06 ஆம் திகதியன்று சிரேஷ்ட மாணவர்களின் ஏற்பாட்டில் இரவுக் களியாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்ட முதலாம் ஆண்டு மாணவனான பசிந்து ஹிருஷான் (20) சிரேஷ்ட மாணவர்களால் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது பசிந்து ஹிருஷான் மீது பாரிய டயர் ஒன்று தூக்கி எறியப்பட்டுள்ளது.
டயர் தலையில் பட்டதன் காரணமாக பசிந்து ஹிருஷானின் மூளையில் சிதைவு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிருக்காக போராடி வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவன் மீது எறியப்பட்டுள்ள டயர் ட்ரக் வண்டியினுடையதா? அல்லது பஸ் வண்டியினுடையதா? அல்லது காருக்கு பயன்படுத்தப் படுவதா? என்பது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றனர்.
அன்றைய தினம் இரவு நடைபெற்ற களியாட்ட நிகழ்வில் சுமார் 100 தொடக்கம் 150 மாணவர்கள் வரை கலந்து கொண்டுள்ளனர்.
அதில் சில மாணவர்கள் மது அருந்தி இருந்ததாகவும் இச்சம்பவம் அதிகாலை 1.15 மணிக்கும் 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலே இடம்பெற்றிருக்க வேண்டுமென்றும் பதில் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவன் சம்பவம் இடம்பெற்ற தினம் முதல் இயந்திரத்தின் உதவியிலேயே வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகின்றது. இம்மாணவரை உலகின் எப்பகுதிக்காயினும் அனுப்பி குணப்படுத்துவதற்கான செலவீனங்களை பல்கலைக்கழகம் பொறுப்பெற்க தயாராக இருப்பதாகவும் பதில் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.
மாணவனை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்ட உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, பகிடிவதைக்கு எதிரான கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் இச்சம்பவத்துக்கு காரணமான மாணவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.