சீனாவில் உருவெடுத்து தற்போது உலகநாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா தொற்றுக்கு அமெரிக்க இராணுவமே மூல காரணம் என சீனா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜாவோ லிஜியான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மார்ச் 11 ம் திகதி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் இயக்குநர் ரொபேர்ட் ரெட்பீல்ட் அமெரிக்க காங்கிரசிற்கு அளித்த தகவலை அடிப்படையாக வைத்து சீனா வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இடம்பெற்ற சில மரணங்களிற்கு கொரோனா வைரசே காரணம் என்பது பின்னர் தெரியவந்தது என ரொபேர்ட் ரெட்பீல்ட் தெரிவித்திருந்தார்.
எப்போது இந்த மரணங்கள் நிகழ்ந்தன எத்தனை பேர் பலியானார்கள் என்பதை அமெரிக்க அதிகாரி தெரிவிக்கவில்லை.
எனினும் இதனை சுட்டிக்காட்டியுள்ள சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜாவோ லிஜியான் இதன் மூலம் கொரோனா வைரஸ் வுகானிலிருந்து பரவத்தொடங்கவில்லை என்பது புலனாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சீன இராஜதந்திரி தனது குற்ற்சசாட்டுகளிற்கான வேறு ஆதாரங்களை முன்வைக்கவில்லை.
அமெரிக்க அதிகாரி கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்,அமெரிக்காவில் இது எப்போது இடம்பெற்றது என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் எத்தனை மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர் அவற்றின் பெயர் என்ன எனவும் சீன இராஜதந்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க இராணுவமே வுகானிற்கு வைரசினை கொண்டுவந்திருக்கலாம் என தெரிவித்துள்ள சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜாவோ லிஜியான் வெளிப்படை தன்மையை பேணுங்கள்,தரவுகளை வெளியிடுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்
இது தொடர்பில் அமெரிக்கா எங்களிற்கு விளக்கமளிக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.