ஐரோப்பா இப்போது தொற்றுநோயின் மையமாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸினால் உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இன்று உரையாற்றியபோதே உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்ரர் ரெட்ரோஸ் அடனோம் கெப்ரியசுஸ் (Dr Tedros Adhanom Ghebreyesus) இவ்வாறு குறிப்பிட்டார்.
உயிர்களைக் காப்பாற்ற தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென உலக நாடுகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் என்னும் இந்த நெருப்பை மட்டும் எரிய விடாதீர்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஐரோப்பாவில் பல நாடுகளில் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக டொக்ரர் ரெட்ரோஸ் அடனோம் கெப்ரியசுஸ் குறிப்பிட்டார்.
ஸ்பெயின் இப்போது இத்தாலிக்கு அடுத்தபடியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடாக மாறியுள்ளது.
இன்று ஸ்பெயினில் உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
ஐரோப்பாவின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில் 17,660 க்கும் மேற்பட்டவர்கள் வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,266 ஆக அதிகரித்துள்ளது.
பிரான்சில் 2,876 பேரும் ஜேர்மனியில் 3,481 பேரும் பிரித்தானியாவில் 798 பேரும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.