சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்தை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் அவசர நிலை பிரகடனம் செய்ய வாய்ப்பிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் பல கொரோனா வைரஸ் பாதிப்பால் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தாலி மற்றும் டென்மார்க் நாடுகள் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்தில் 170 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்கானதை அடுத்து, அந்த மாகாண நிர்வாகம் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்தது.
இந்த நிலையில், சுவிட்சர்லாந்தில் ஒரே நாளில் 260 பேர் பாதிப்புக்கு உள்ளான நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சுவிஸ் குடும்பங்கள் தங்கள் வீட்டு முதியவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும், தேவை ஏற்பட்டால் மருத்துவமனையை நாட தயக்கம் வேண்டாம் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக சிறார்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட வேண்டாம் எனவும், பொது போக்குவரத்தை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவு விடுதிகள் கண்டிப்பாக தங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 50-குள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
டிசினோவை பொறுத்தமட்டில் இந்த அவசர நிலை பிரகடனமானது உயர் கல்வி அல்லது தொழிற்பயிற்சி நிறுவனங்களை பாதிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 1,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 267 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.