கொரோனா தொற்று தாக்கம் குறித்து அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகள் முரண்பட்டதாகவே உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற வடக்கு கிழக்கு பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்களை அரசாங்கம் அமைப்பதானது தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அழிக்கின்ற சதி நடவடிக்கையா என்ற சந்தேகம் எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் கட்டப்பிராயிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது கொரோனா தொற்று தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
கொரோனா தொடர்பில் ஆராய்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து அரசியல் நோக்கம் கொண்டதாக அரசின் முடிவுகள் அமையக் கூடாது.
உண்மையில் வடக்கிலோ அல்லது முழு நாட்டிலோ பாதிப்பு இருந்தால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்பது அவசியமானது தான்.
ஆனால் அந்த நடவடிக்கைகள் சரியான முறையில் கலந்து பேசி ஆராய்ந்து எடுக்கப்படுவதே பொருத்தமானதாக இருக்கும்.
ஆனால் இன்றைக்கு அரசாங்கம் எடுக்கின்ற முடிவுகள் என்பது மிகவும் முரண்பட்ட முடிவுகளாகவே இருக்கின்றது. இவ்வாறாக முரண்பட்ட முடிவுகளை ஏன் எடுக்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இத்தாலி அல்லது தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகின்றவர்கள் விமான நிலையத்தில் வைத்து சோதனைக்குட்படுத்தி மேலதிக சோதனைகளுக்காக மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.
அவ்வாறு அங்கு சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் தான் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அரசாங்கம் கூறுகின்றது.
ஆனால் சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகின்றவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை என்று அரசாங்கம் கூறுகின்றது. ஏனெனில் சீனாவில் தற்பொது கொரோனா தாக்கம் குறைவடைந்து வருவதாக அதற்கு காரணமும் கூறுகின்றது.
உண்மையில் இந்த கொரோனா தொற்று தாக்கம் சீனாவில் தான் உருவாகியது. அங்கு பலர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போதும் வைத்தியசாலையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனனர்.
ஆக மொத்தத்தில் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை இல்லை. ஆனால் இத்தாலியோ தென்கொரியாவோ அல்லது வேறு நாடுகளிலோ இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை என அரசின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் என்பது மிகவும் முரண்பட்ட நடவடிக்கைகளாகவே பார்க்கப்படுகிறது.
ஆகவே அரசின் இத்தகைய முரண்பட்ட முடிவுகள் என்பது மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஆகையினால் இவை தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
குறிப்பாக வடக்கு கிழக்கு என்பது ஏற்கனவே பாதிக்கப்பட்டடு இருக்கிற நிலையில் அங்கு கொண்டு செல்வதென்பது ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கையா என்று சந்தேகம் கொள்ளத் தோன்றுகிறது.
இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடாத்துகின்றனர். ஆகவே மிக நீண்ட தூரம் கொண்டு சென்று பரிசோதிப்தை விடுத்து விமான நிலையத்திற்கு அண்மித்ததாக உள்ள பிரதேசங்களிற்கு கொண்டு சென்று பரிசோதிப்பதே பொருத்தமாகும்.
அரசின் இத்தகைய நடவடிக்கைகள் என்பது தமிழ் மக்களுக்கு மேலும் மேலும் அரசின் மேல் பெறுப்பை தான் ஏற்படுத்தும் என்றார்.