தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் குளிர்சாதனப்பெட்டி வெடித்து முதியவர் ஒருவர் உயிழந்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மணவாளன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி (82). இவரது மனைவி நவநீதம். நேற்றிரவு வழக்கம்போல பக்கிரிசாமி வீட்டில் தூங்கியுள்ளார். அவர் படுத்திருந்த இடத்திற்கு அருகே பிரிட்ஜ் இருந்துள்ளது. எப்போதும் இரவு தூங்க செல்வதற்குமுன்பு பக்கிரிசாமி பிரிட்ஜ் மின் இணைப்பை துண்டிப்பது வழக்கம்.
அதனைப் போல் நேற்றிரவு பிரிட்ஜ் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, பிரிட்ஜின் மேல் கொசுவத்தியை ஏற்றி வைத்துவிட்டு தூங்கியுள்ளார். அப்போது பிரிட்ஜிக்கு மேல் இருந்த துணியில் கொசுவத்தி விழுந்து தீப்பிடித்துள்ளது. இதனையறியாத பக்கிரிசாமி நன்றாக தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். திடீரென துணி முழுவதும் தீ பற்றி பிரிட்ஜ் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
இதில் பிரிட்ஜிக்கு அருகில் படுத்திருந்த பக்கிரிசாமி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பக்கிரிசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.