பொதுவாக இந்து மதத்தைப் பொருத்தவரையில் சம்பிரதாயங்கள், சாஸ்திரங்கள் இரண்டு கலந்த கலவையாகத் தான் இருக்கிறது. ஆனால் அதில் ஒவ்வொரு சம்பிரதாயத்துக்கும் பின்னால் ஏதாவது அறிவியல் காரணங்கள் பொதிந்து கிடக்கும். அதில் ஒரு விஷயம் தான் இது. தங்கம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நம் எல்லோருக்குமே தெரியும்.
அதை வாஸ்துப்படி எப்படி அணிய வேண்டும் என்பது தான் இந்த தொகுப்பு. குறிப்பாக, உப்பில் தங்கத்தை வைத்து எடுத்தால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொண்டு அதை நீங்களும் பின்பற்றுங்கள்.
அறிவியல் உண்மைகள்
ஒவ்வொரு சம்பிரதாயத்துக்கும் பின்னால் ஏதாவது அறிவியல் காரணங்கள் பொதிந்து கிடக்கும். நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிய ஒவ்வொரு நம்பிக்கைக்குப் பின்னாலும் ஏராபளமான அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அதைத் தான் இன்றைய விஞ்ஞானிகள் விஞ்ஞான மொழியில் நமக்கு எடுத்துரைக்கிறார்கள்.
சம்பிரதாயங்கள்
பொதுவாக இன்றைய தலைமுறையினர் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரிலும் மூடநம்பிக்கை என்று சொல்லிக் கொண்டு நம் முன்னோர்கள் கடைபிடித்த சம்பிரதாயங்களைக் கடைபிடிக்க வெட்கப்பட்டு ஒதுக்குகிறார்கள். அதேபோல் உடனடி பலன் இருக்கும் விஷயத்தை மட்டுமே செய்ய நினைக்கிறார்கள். நாம் செய்யும் ஒரு விஷயத்துக்கான பலனை நிச்சயம் ஒரு நாளில் கிடைக்கும் என்ற நம்பிக்கை தான் மிக முக்கியம்.
புது துணிகளில் மஞ்சள்
நாம் பார்த்து பார்த்து விரும்பி வாங்கும் ஆடைகளில் நம் முன்னோர்கள் மஞ்சள் வைப்பார்கள். அது ஏன் என்று தெரியுமா?, நாம் வாங்க விரும்பும் ஆடைகளை வேறு யாராவது வாங்க வேண்டும் என்று விரும்பியிருப்பார்கள். அவர்களுடைய எண்ண அலைகள் முழுக்க அந்த ஆடைகளில் படிந்திருக்கும்.
அதை நீக்கி, உங்களுடைய விருப்ப அலைகளைச் சுடர்விடச் செய்வதற்காகவே புதிய ஆடைகளில் மஞ்சள் வைப்பார்கள். இந்து மதத்தைப் பொருத்தவரையில் மஞ்சள் என்பது மங்களமான பொருளாகக் கருதப்படுகிறது. அதனால் தான் மஞ்சள் என்பது தோஷத்தை நீக்கும் அற்புத மூலிகையாக இருக்கிறது.
தங்கம் வாங்க
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் அதிகமாகச் சேரும் என்று சொல்வார்கள். அதனாலேயே அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும். குறிப்பாக பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர தினங்களில் சுக்கிரன் மற்றும் புதன் ஓரையில் ஒரு குண்டுமணி அளவு தங்கம் வாங்கினாலும் அடுத்தடுத்து தங்கம் வாங்கும் யோகம் வருமாம். அதேபோல புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த நட்சத்திரங்கள் சேர்ந்தது போல அட்சய திருதியை வந்தால் அந்த நாளில் நகை வாங்கினால் அவர்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது என்று சொல்வார்கள்.
தங்கமும் உப்பும்
புத்தாடைக்கு மஞ்சள் தடவினால் தோஷம் விலகும் என்பது போல, நீங்கள் வாங்குகின்ற தங்கத்தை ஒரு சுத்தமான துணியில் கட்டி, உப்புக்குள் ஒரு நாள் முழுக்க முழுவதும் புதைத்து வைத்திருக்க வேண்டும். அதனால் தங்கத்தின் மீது இருக்கின்ற தோஷங்கள் முழுக்க விலகி விடும். உங்களிடம் இருக்கும் தங்கம் பெருகிக் கொண்டே போகும்.