உலகமெங்கும் கொரோனா மிரட்டி வரும் நிலையில் நடிகர் அரவிந்த் சாமி அது குறித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக, இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 85 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில் கொரோனா தொற்று நோய் தொடர்பாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சர்வதேச அளவில் இருக்கும் வைரஸ் தொற்று பற்றி என் சிந்தனைகள். உலகின் மற்ற நாடுகளை விட நம் நாட்டில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போதைக்குக் குறைவாகவே உள்ளது. ஆனால், பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத நம்மில் பலரில் யார் அந்த தொற்றைக் கொண்ட அறிகுறியல்லாதவர்கள் என்று நமக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை தொற்றை நாம் நிறுத்தக் கூடிய, நிறுத்த வேண்டிய முக்கியமான கட்டம் இதுவே.
COVID-19. My thoughts on a few things that need to be done.. pic.twitter.com/Wc1cIdc06U
— arvind swami (@thearvindswami) March 13, 2020
அடுத்து தெளிவான தகவல் கிடைக்கும் வரை தற்காலிகமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட, பொது நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த, பெரிய எண்ணிக்கையில் மக்கள் கூடும் எந்த நிகழ்ச்சியையும் ஒத்திவைக்க அரசாங்கம் யோசிக்க வேண்டும் எனக் கோருகிறேன்.
ஏற்கெனவே சில மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது என்பது எனக்குத் தெரியும். இதை நாம் தேசிய அளவில் செயல்படுத்த வேண்டும். உலகம் முழுவதும் நிகழ் நேரத்தில் கிடைக்கும் விஷயங்களை, இந்த கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் மற்ற அரசுகளின் ஆய்வுகளை வைத்து, அதைக் கருத்தில் கொண்டு அரசு செயல்படும் என நான் நம்புகிறேன்.
மனித இனத்துக்கு இப்படியான சர்வதேச நெருக்கடி நேரும்போது, அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து இந்தச் சவாலை எதிர்கொள்வார்கள் என்றும் நம்புகிறேன்.
அனைத்து அமைப்புகள், நிறுவனங்களும், அவர்கள் பணியிடத்தில் சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன். பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு ஏற்றவாறு நாம் தயாராகி அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இது சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் அசாதாரணமான சூழல் மற்றும் அதன் தாக்கம். அரசாங்கம் மட்டும் தனியாக இதை எதிர்த்துப் போராட முடியாது. அதனால், நாம் ஒவ்வொருவரும் பொறுப்புள்ள குடிமகனாக இருந்து, கண்டிப்பான சுகாதார முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
அறிகுறிகள் இருந்தால் அதை உரியவர்களுக்குத் தெரிவித்து, இந்த தொற்று பரவ வாய்ப்பு இருக்கும், மக்கள் அதிக எண்ணிக்கையில் கூட வேண்டியிருக்கும் விழாக்களை நடத்தாமல், இது போன்ற சூழலில் தேவையான எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.
அமைதியாக, பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.