சென்னையில் நாய்கறி பிரியாணி விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வரும் புகைப்படங்களால் அசைவப் பிரியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சில நடைபாதை கடைகளில் குறைந்தவிலையில் பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக பூனைகள் கொல்லப்பட்டு, பூனை பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது என்று செய்தி வெளியிட்டு இருந்தது.
இது தொடர்பாக விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர்கள் புகார் செய்ததையடுத்து, சிலர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே கோழிபிரியாணி என்ற பெயரில் காக்கா பிரியாணி வழங்கப்படுவதும், செய்திகளாக நாளேடுகளில் வந்தன. இதனால், நடைபாதை கடைகளிலும், ஒரு சில பிரியாணி கடைகளிலும் பிரியாணி சாப்பிட அசைவம் சாப்பிடுவோர் அஞ்சினர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக நாய்கள் கறிக்காக கொல்லப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஒருநபர் நாயை கழுத்தை அறுத்தும், அதை ஆட்டுத்தோல் உரிப்பதுபோல் உரித்து வைத்தும், அதை பெரிய துண்டுகளாக வெட்டிவைத்தும் இருப்பதுபோல் புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. இந்த நாய்கறி சென்னையில் சில கடைகளுக்கு இந்த கறிகள் சப்ளை செய்யப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
இது குறித்து விசாரித்த போது, பெங்களூரில் சிலர் இறைச்சிக்காக நாய்களைக் கொன்றதும், அது தொடர்பாகச சிலர் கைது செய்யப்படதும் தெரியவந்தது. ஆனால், இந்தபுகைப்படம் வெளியானதில் இருந்து, சென்னையிலும் நாய்கறி பிரியாணி சப்ளை செய்யப்படுவது உண்மையோ என அசைவ பிரியர்கள் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து பி.எப்.சி.ஐ. அமைப்பைச் சேர்ந்த ஒருநபரிடம் கூறுகையில், சமீபத்தில் கேரளாவில் இதுபோல் நாய்கள் கறிக்காக கொல்லப்படும் சம்பவம் நடந்துள்ளது. சென்னையில் இதுபோல் நடக்கிறதா என்பது குறி்த்து விசாரிக்கிறோம் என்றார்.