நாடு முழுவதும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களா என சந்தேகிப்போரை மன்னாரில் தனிமைப்படுத்துவதற்காக அழைத்து வரும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை நாட்டிற்குள் வருபவர்களில் ‘கொரோனா’ வைரஸின் தாக்கம் இருக்கும் என சந்தேகிக்கப்படும் நபர்களை மன்னாரிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது. குறித்த நடவடிக்கை மன்னார் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மன்னார்-தலை மன்னார் பிரதான வீதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை கட்டிட தொகுதியில் இன்று குறித்த நபர்களை கொண்டு வந்து தனிமைப்படுத்தி வைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் மன்னார் மக்கள் அச்சசமடைந்த நிலையில் உள்ளனர். குறித்த ஆடைத்தொழிற்சாலையை அண்டிய பகுதியில் மக்கள் அதிகம் நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
பாதிப்பிற்கு உள்ளானவர்கள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள ஒத்துழைப்பை வழங்க முடியும்.
ஆனால் வெளி நாட்டைச் சேர்ந்த, ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்களை மன்னாரிற்கு அழைத்து வந்து தனிமைப்படுத்த அனுமதிக்க முடியாது.
குறித்த பகுதியில் குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் என பலதரப்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே அவர்களுக்கும் குறித்த வைரஸ் தொற்று ஏற்படலாம். எனவே வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மன்னாருக்குள் அழைத்து வந்து தனிமைப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.