முதலமைச்சரின் வீட்டின் உள்ளே சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒற்றுமையாக இருக்கின்றனர். ஊரில் தான் சண்டை பிடிக்கின்றனர். இதில் என்ன நியாயம் இருக்கிறது என எனக்குத் தெரியவில்லை. தமிழீழ விடுதைலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் திருமணம் செய்தது சிங்கள பெண்ணையே. மைத்திரிபால சேனநாயக்க திருமணம் செய்த்து தமிழ் பெண்ணையே. எனவே இன மத பேதங்களை மறந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்
சர்வோதய அமைப்பின் நல்லிணக்க வேலைத்திட்டத்தின் கீழ் நல்லிணக்கம் மீதான வடக்கு, கிழக்கு மக்களின் விரிந்துரைகள் எதிர்பார்ப்புகள் குறித்த பிரகடனத்தை வெளியிடும் விசேட வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டிலேயே எல்லோரும் இன, மத, மொழி, குல, பேதம் இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் எல்லோரும் ஒன்றாக வாழ வேண்டும் அதற்காகவே இந்த சர்வோதய அமைப்பு செயற்படுகிறது.
இந்த நாடு சிறிய நாடாயினும் இந்த நாட்டினை போல அழகான நாடு உலகத்தில் இல்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடம் நான் வினா ஒன்றினை எழுப்பினேன். அதாவது நீங்கள் இந்த உலகத்தில் உள்ள நாடுகள் எல்லாவற்றிக்கும் சென்று பலரை சந்தித்து உள்ளீர்கள் இந்த நாட்டினை விட அழகான நாடு உள்ளதா என கேட்டேன். அவர் இல்லை என்றே பதில் தந்தார்.
இந்த அழகான நாட்டில் உள்ள மக்கள் துன்பப்பட காரணம் என்ன என நான் சிந்திப்பது உண்டு. எங்கு தவறு இருக்கிறது எனப் பார்த்தேன். நாட்டில் நல்ல காலநிலை இருக்கிறது, நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் ஆனால், அவர்களுடைய மனதிலேயே குற்றம் இருக்கிறது. மனதிலே இருக்கிற அந்தக் குற்றம் ஒழியும் போதே நாட்டில் நல்ல சூழ்நிலை உருவாகும். நல்ல நடத்தைகள் நல்ல சிந்தனை இருக்க வேண்டும். கெட்ட சிந்தனைகளுக்கு கெட்ட சிந்தனைகளே காரணம்.
இந்த நாட்டில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைந்து வாழ்ந்தால் அபிவிருத்தி தானாக நடைபெறும். அபிவிருத்தியில் கடினமான காரணமாக காணப்படுவது தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாக செயற்படாததே.
உண்மையில் தமிழ் மக்களும், சிங்கள மக்களும் இந்தியாவிலேயே இருந்து வந்தனர். புத்தசமயம், இந்துசமயம் உட்பட எல்லா சமயங்களும் இந்தியாவில் இருந்தே வந்தன. சிங்கள மக்களும், தமிழ் மக்களும் நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் வாழவேண்டும்.
ஏனெனில் நாம் எல்லோரும் சொந்தங்கள். நமது முன்னைய சிங்கள அரசர்கள் இந்தியாவில் இருந்து அதாவது மதுர புரியில் இருந்து பெண் எடுத்தே திருமணம் செய்தனர். எனவே சுத்த இரத்தம் இல்லை. எனவே எல்லா இரத்தமும் கலந்தே இருக்கிறது. நீங்கள் சுகயீனம் உற்ற வேளையில் வைத்தியர் இரத்தம் ஏற்ற சொன்னால் நீங்கள் கூற முடியாது தமிழ் இரத்தம் தான் வேண்டும் சிங்கள இரத்தம் வேண்டாம் என்று கூற முடியாது.
பௌத்த விகாரைகளுக்குள்ளே போய்ப் பாருங்கள் எல்லா தமிழ் கடவுள்களும் உள்ளது. விஷ்ணு, கணபதி, பத்தினி, தெய்வம் போன்றன உள்ளன. சிங்கள தெய்வமும், தமிழ் தெய்வங்களும் சாந்தியினையே வலியுறுத்துகின்றன.
வெளியில் கும்பிடுபவர்களே சண்டை பிடிக்கின்றனர். பணக்கார பிரபுக்கள் எல்லோரும் இந்த மத பேதங்களை மறந்து திருமணம் செய்து கொள்கின்றனர். இதைவிட மிகச்சிறந்த உதாரணமாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை குறிப்பிடலாம். விக்னேஸ்வரனுடைய மகன் திருமணம் செய்தது வாசுதேவ நாணயக்காரவின் மகளையே.
முதலமைச்சரின் வீட்டின் உள்ளே சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒற்றுமையாக இருக்கின்றனர். ஊரில் தான் சண்டை பிடிக்கின்றனர் இதில் என்ன நியாயம் இருக்கிறது என எனக்குத் தெரியவில்லை. தமிழீழ விடுதைலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் திருமணம் செய்தது சிங்கள பெண்ணையே. மைத்திரி பாலா சேனநாயக்க திருமணம் செய்தது தமிழ் பெண்ணையே. எனவே இன மத பேதங்களை மறந்து செயற்பட வேண்டும்.
30 வருட யுத்தத்தில் என்ன கிடைத்தது வேறுமனே நஷ்டமும் வேதனையுமே ஏற்பட்டது. இப்போது சாந்தியும் சமாதானமும் ஏற்பட்டு இருக்கிறது. இந்த காலத்தில் அபிவிருத்தி துரிதமாக நடைபெறுகிறது. இதனை தக்கவைத்துக்கொள்ள பாடு பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.