தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று மாலை ரஜினியின் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த் கடந்த 1996ஆம் ஆண்டு ஜெயலலிதா தேர்தலில் தோல்வி அடைய நானும் ஒரு காரணமாக இருந்தேன். ஆனால் அதை மனதில் வைத்து கொள்ளாமல் எனது மகள் திருமணத்திற்கு வந்து வாழ்த்து தெரிவித்த பொன்மனம் கொண்டவர் ஜெயலலிதா என்று ரஜினிகாந்த் பேசினார். அவர் மேலும் கூறியதாவது:
கார்பன் வெப்பத்தாலும், அழுத்தத்தாலும் காலப்போக்கில் வைரமாக மாறும். அதுபோல், ஜெயலலிதாவும் பல்வேறு போராட்டங்களால் வைரமாக மாற்றப்பட்டார். பொதுவாழ்க்கையில் ஜெயலலிதா வைரம் போன்றவர்.
துணிச்சல் எதிர்நீச்சல் போன்றவற்றை ஜெயலலிதாவிடம் இருந்து கற்க வேண்டும். ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயத்தில் தன்னுடைய முயற்சியால் முன்னேறி வந்தவர்.
1996 தேர்தலில் நான் பேசிய அரசியல் பேச்சால் அவர் மனம் துன்பப்பட்டார். இருப்பினும், என்னுடைய அழைப்பை ஏற்று மகளின் திருமணத்திற்கு வந்தார்.
அவரைப் போல் சோதனைகளை சாதனையாக்கியவர் யாரும் இல்லை. இது பெண்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் முன் உதாரணம். பொதுவாழ்க்கைக்காக தனது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தவர்.