வர்த்தக பெருந்தகைளுக்கு வணக்கம்.
மனிதகுலத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் ஒவ்வொரு அரசாங்கங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்தும், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியும் வருகின்றது. இதில் பிரான்ஸ் அரசாங்கமும் அடங்கும்.
அந்தவகையில் சற்று முன்னர் அதிபர் இமானுவேல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு வழங்கிய இரண்டாவது உரையினைத் தொடர்ந்து இந்த பகிரங்க கடிதத்தினை தங்களுக்கு வரைகின்றேன்.
கடந்த வாரம், அதிபராகட்டும், பிரதமராகட்டும், அரசாங்கத்தின் அனைத்து தரப்பினரும் பொதுமக்களுக்கு விடுத்த அறிவுறுத்தல்களில் ‘ வேகமாக பரவும் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த, ஒவ்வொரு மனிதர்களும், சுயமாக கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடுகளை வலியுறுத்தியிருந்தனர். குறைந்தது ஒவ்வொருவருக்கும் இடையில் 1 மீற்றர் இடைவேளி காணப்பட வேண்டும் என்பதாகும்.
இந்த நடைமுறை என்பது தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல, வர்த்தகர்களுக்கும் பொருந்தும் என்றே கருதுகின்றேன்.
பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் அரசி-பருப்பு-உலர் உணவுகள் என்று பலதையும் கொள்வனது செய்ய வேண்டும் என பொதுமக்களால் அங்காடிகள் நிறைந்து காண்பட்டன.
மக்கள் நெருக்கடியாக இருந்ததனை கண்கூடாக காணக்கூடியதாக இருந்தது. மக்கள் நெரிசலைக் கட்டுபடுத்தி, வைரஸ் தொற்றில் இருந்து ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு வர்த்தக நிறுவனங்களும் உண்டு என்பதனை தங்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன்.
மருந்தகங்களும், பிரென்சு பல்பொருள் அங்காடிகள் யாவும, மக்கள் நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு, வாசல்களில் கட்டுப்பாட்டுடன் மக்களை உள்நுழைய விட்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.
ஆனால் லாச்சப்பல் தமிழர் அங்காடிகளில் இதனைக் காணக் கிடைக்கவில்லை.
ஏன் ?
வருவாய் மட்டுமல்ல, மனிதநேயமும் முக்கியம். இது எல்லோருக்குமான உயிர்காப்பு நடவடிக்கை.
உதாரணத்துக்கு செல்லப்பா ரீ கடை நிறைந்து காண்பட்டது. ஒருமீற்றருக்குள் நான்கு பேர் நெருங்கி நிற்கின்றனர். ஆனால் அரசாங்கம் சொல்கின்றது ஒவ்வொருவருக்கு இடையில் குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளியினை கடைப்பிடியுங்கள் என்று.
சற்று இதில் கவனமெடுங்கள்.
இதேவேளை லாச்சப்பலில் பல பொருட்களுக்கு சட்டென்று ரெக்கை முளைத்தனை அவதானிக் கூடியதாக இருக்கின்றது.
சாதாரணமாக ஆட்டுத்துடை 1 கிலோ 4,50, ரெக்கை முளைத்து 8,90 ஆக வாங்க வேண்டியுள்ளது.
2 யுறோவுக்கு விற்ற 3 லெமன் பிஸ்கற் பக்கற், ஒன்று 2 யுறோவுக்கு விற்கப்படுகின்றது.
லாசப்பல் தமிழ்வர்த்தக நிலையங்களுக்கென்று, தமிழ் வர்த்த நிலையம் ஒன்று இருப்பதாக அறிகின்றேன்.
அவ்வாறெனில், ரீ, வடையின் விலைகளை தீர்மானிக்க மட்டுமா அச்சங்கம் என்ற கேள்வி எழுகின்றது.
உண்மையில், இவ்வாறான நெருக்கடியான நேரத்தில் வர்த்தக சங்கம் ஒவ்வொரு வர்த்தக நிலையமும், வாடிக்கையாளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகளை தமிழிலிலும், பிரென்சிலும் வாசலில்; அனைவரது கண்ணுக்கு தெரியும்படி ஒட்ட வேண்டும்.
மற்றது, நான் மட்டுமல்ல, பலராலும் சமூகவலைத்தளத்தில் குற்றஞ்சாட்டப்படுகின்ற சடுதியான விலையேற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மனித நேயததுடன் கூடிய விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
இது காசு பார்ப்பதற்கான நேரம் அல்ல. மனித நேயத்தை வெளிப்படுத்துகின்ற நேரம்.
அனைவரும் அர்ப்பணிப்புடன் கொடிய வைரஸ் தொற்றுக்கு எதிராக யுத்தம் புரிய வேண்டும் என ஜனாதிபதி ஏமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அகைவரும் அர்பணிப்புடன் செயல்படுவோம்.