கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த புத்தளம் மாவட்டத்தை தனிமைப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயற்பாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முகமாக வெளிநாடுகளில் இருந்த வருவோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான ஆபத்து அதிகம் உள்ள இடமாக புத்தளம் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலியில் இருந்து, மார்ச் முதலாம் திகதிக்கும் 10 ஆம் திகதிக்கும் உட்பட்ட காலத்தில் வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படாத பலர் புத்தளம் முழுவதும் உள்ளனர்.
அவர்கள் தொடர்ந்தும் பொறுப்பற்று செயற்பட்டால் சுகாதார ஆலோசனைகளை புறக்கணித்தால் புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கான முடக்கல் குறித்த செயற்பாட்டுக்கு நாம் தள்ளப்படலாம் என்றும் கூறினார்.
இதேவேளை இத்தாலியில் இருந்து வருகை தந்த இலங்கையர்களில் அதிகமானவர்கள் புத்தளம் மாவட்டத்திலேயே இருப்பதாகவும் அவர்கள் எப்போதும் சுகாதார அமைச்சு வழங்கும் நடைமுறைகளை பின்பற்றுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்குமாறும் வைரஸ் பரவாதவாறு செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மார்ச் 01 ஆம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை எனவும் தற்போதைய நிலையில் இவர்களூடாக கொரோனா தொற்று பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அக்காலப்ப்குதியில் சுமார் 1500 முதல் 2000 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியதுடன் இவர்களில் 800 பேர் வரை புத்தளம் மாவட்டத்தில் வசிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.