கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து, யாரெல்லாம், எப்படி மாஸ்க் அணிய வேண்டும் என்று இந்திய மத்திய அரசு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
மாஸ்க் அணிவதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம் என்று கூறப்படுவதால், மாஸ்க் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து யாரெல்லாம் மாஸ்க் அணிய வேண்டும் என்று மத்திய அரசு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டியதில்லை. 3 வகையான மக்கள் மட்டும் மாஸ்க் அணிந்தால் போதுமானது.
1. சளி, காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகளைக் கொண்ட மக்கள்
2. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனா அறிகுறிகளைக் கொண்டவர்களைக் கவனித்துக் கொள்வோர்
3. மூச்சு விடுவதில் சிரமம் கொண்ட நோயாளிகளைப் பராமரிக்கும் சுகாதார ஊழியர்கள்
இவர்கள் மட்டும் மாஸ்க் அணிந்தால் போதுமானது.
முறையாக மாஸ்க் அணிவது எப்படி?
- மாஸ்க்கின் மடிப்புகளை விரித்து, கீழ்நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.
- மூக்கு, வாய், மோவாய் ஆகியவை முழுமையாக மூடுமாறு மாஸ்க் அணிய வேண்டும்
- மாஸ்க்கின் அனைத்துப் புறங்களிலும் இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
- 6 மணி நேரத்துக்கு ஒருமுறை அல்லது மாஸ்க் ஈரமான பிறகு, அதை மாற்றிவிட வேண்டும்.
- ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மாஸ்க்கை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
- பயன்படுத்திய மாஸ்க்கை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
- மாஸ்க்கைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது கைகளால் தொடக்கூடாது.
- மாஸ்க்கைக் கழற்றும்போது தொற்று ஏற்பட வாய்ப்புள்ள வெளிப்புறத்தைக் கட்டாயம் தொடக்கூடாது.
- மாஸ்க்கைக் கழுத்தில் தொடங்க விடக்கூடாது.
- மாஸ்க்கைக் கழற்றியபிறகு கைகளை சுத்திகரிப்பான்களால், முறையாகக் கழுவ வேண்டும்
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 7171 பேர் உயிரிழந்துள்ளனர். 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 147 பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்காவில் தற்போது வரை 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.