பிரித்தானிய தலைநகர் லண்டனை அவுஸ்திரேலியாவின் பெர்த் நகருடன் இணைக்கும் 17 மணிநேர இடைநில்லா விமானச் சேவையை குவாண்டாஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
லண்டனில் இருந்து அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரை இணைக்கும் விமான சேவையினை குவாண்டாஸ் நிறுவனம் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 14,498 கிமீ தூரத்தை கடந்து செல்லும் இடைநில்லா விமானச் சேவை நீண்ட காலமாக பல்வேறு நிறுவனங்களும் அறிவித்து பின் அவற்றை கைவிட்டன.
பல ஆண்டுகளாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் இடைநில்லா விமான சேவையினை மார்ச் 2018 முதல் வழங்குவதாக குவாண்டாஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் தேசிய விமானச் சேவையை வழங்கி வரும் குவாண்டாஸ் இடைநில்லா விமானச் சேவையினை போயிங் 787-9 டிரீம்லைனர் ரக விமானங்களை கொண்டு வழங்கும் என தெரிவித்துள்ளது.
லண்டன் முதல் அவுஸ்திரேலியா வரை இருக்கும் 14,498 கிமீ தூரத்தை இடைநில்லாமல் கடக்க சுமார் 17 மணி நேரம் ஆகும்.
அவுஸ்திரேலியாவில் இருந்து லண்டன் செல்லும் பயணிகளுக்கு பெர்த் சிறந்த இடமாக இருக்கும் என அவுஸ்திரேலிய சுற்றுலா துறை அமைச்சர் ஸ்டீவன் கொய்போ தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா வரும் வெளிநாட்டு பயணிகளில் பெரும்பாலானோர் லண்டனில் இருந்து வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு முதல் லண்டனில் இருந்து அவுஸ்திரேலியா வருவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.