வீட்டில் மின்சாரத்தை எதற்காக பயன்படுத்துகிறீர்கள்? எனக் கேட்டால் எல்லாரும் இலகுவாக கூறிவிடுவார்கள். ஆனால் வீட்டில் மின்சாரத்தை எதற்காக வீண்விரயம் செய்கிறீர்கள்? என்று கேட்டால் அனைவரும் வாயடைத்துப் போய்விடுவார்கள்.
ஆனால் இவை குறித்து நீங்கள் அறிந்து வைத்திருத்தல் கட்டாயம். காரணம் இவ்வாறு வீணாக்கப்படும் மின்சாரமானது எதிர்காலத்தில் மின்சாரத்தை இல்லாமல் ஆக்கிவிடக் கூடும். சில நேரங்களில் அநாவசியமாக மின்விசிறிகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை எம்மால் காணக்கூடியதாயிருக்கும்.
அது மாத்திரமா மின்விளக்குகள் பகல் நேரங்களில் நன்கு வெளிச்சமுள்ள இடங்களில் கூட ஒளிர்ந்து கொண்டிருக்கும் மற்றும் கைத்தொலைபேசிகள் நீக்கப்பட்ட பின்னும் கூட சார்ஜர் மின் வழங்களுடன் தொடர்பில் இருக்கும்.
அது போன்றே குளிர்சாதனப்பெட்டிகளை அடிக்கடி திறந்து மூடல் அல்லது குளிர்சாதனப்பெட்டியை திறந்து விட்டு மூடாமல் செல்வது போன்ற பல்வேறு விடயங்களால் மின்சாரம் விரயமாக்கப்படுகிறது.
மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் சில…
* மின்விசிறி – மின்விசிறிகளை தெரிவுசெய்யும் போது குறைந்த எடையுடைய மற்றும் மின் திறன்மிக்க மின்விசிறிகளை தெரிவுசெய்தல் நன்று. மின்விசிறி பிளேடுகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அவசியமற்ற நேரங்களில் மின்விசிறிகளை நிறுத்திவைத்துவிட்டு செல்ல வேண்டும். இதன் மூலம் அதிகளவிலான மின்சாரத்தை சேமித்துக்கொள்ள முடியும்.
* கிரைன்டர் – மின்திறன் மிக்க மோட்டார்களை இணைப்பதன் மூலம் மின்விரயத்தை குறைக்க முடியும். கிரைன்டர்களை எப்போதும் அதன் முழுதிறனுக்கே உபயோகித்தல் சிறந்தது.
* வாஷிங் மெசின் – எப்பொழுதுமே அதன் முழுதிறனுக்கே செயற்படுத்திக் கொள்ள வேண்டும். வாஷிங் மெசினில் உள்ள டிரையரை பயன்படுத்துவதை தவிர்த்து சூரியஒளியில் உடைகளை காயவைப்பது நல்லது. மழைக்காலங்களில் மாத்திரம் டிரையரை உபயோகிப்பது சிறந்தது.
* ஹீட்டர் – வெப்ப இழப்பினைத் தவிர்த்திட சுடுநீர் செல்லும் குழாய்களுக்கு தகுந்த வெப்ப பாதுகாப்பு உறை அமைக்கப்பட வேண்டும். குழாயின் இணைப்புகளில் நீர் கசிவுகள் ஏதேனும் உள்ளதா என அடிக்கடி சோதனை செய்ய வேண்டும்.
* கணினி – பயன்படுத்தப்படாது உள்ள போது நிறுத்தி வைக்க வேண்டும். 24 மணி நேரமும் ஒரு கணினி செயல்படுமாயின் அக்கணினி மிக அதிகளவு மின்சாரத்தை வீணடிக்கிறது. தேவையான போது மட்டும் கணினியை இயக்குவதும் மற்றும் பயன்பாடு இல்லாத போது இயக்கத்தை நிறுத்தி வைத்து பயன்படுத்தும் போது மின்சக்தி சேமிக்கப்படுவது மட்டுமல்லாமல் கணினியையும் நீண்ட நாள் பாவிக்கவும் முடியும்.
* மின்னழுத்தி – தேவையான துணியனைத்தையும் ஒரே நேரத்தில் “அயர்ன்” செய்வது சிறந்தது. வேலை முடிந்ததும் மின்னழுத்தியை தொடுப்பகற்றி வைத்தல் வேண்டும்.
* குளிர்சாதனப்பெட்டி – குளிர்சாதனப்பெட்டியின் பாவனைக்கு 12 சதவீத மின்னாற்றல் தேவைப்படுகிறது. குளிர்சாதனப்பெட்டிக்கும் சுவருக்கும் இடையே போதியளவு இடைவெளி இருப்பது அவசியமாகும். நொடிக்கொருமுறை குளிர்சாதனப்பெட்டியை திறந்து மூடுவதன் அதிகளவான மின் விரயமாக்கப்படுகிறது.
* மின்னடுப்பு – இவ்வகையான அடுப்புகளில் தட்டையான அடியை கொண்ட பாத்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் சக்தியை விரயமின்றி பயன்படுத்திக் கொள்ள முடியும்.
* மின்விளக்குகள் – சி.எப்.எல் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். சி.எப்.எல் விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் மின் பாவனையை குறைக்க முடியும்.
* குளிரூட்டிகள் – குளிரூட்டிகள் பயன்படுத்தப்படும் அறைகள் சிறு இடைவெளியும் இன்றி முழுதாக மூடப்பட்டிருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட குளிரூட்டிகள் ஒரு அறையில் இருக்குமானால் அனைத்து குளிரூட்டிகளையும் ஒரே அளவில் பேணுவது சிறந்தது.
* தொலைக்காட்சிபெட்டி – தொலைக்காட்சியின் அளவிற்கு ஏற்ப மின்சார செலவு மாற்றமடையும். தொலைக்காட்சி பார்த்து கொண்டிருப்பவர்கள் செல்வதானால் தொலைக்காட்சியை தொடுப்பகற்றி விட்டு செல்ல வேண்டும். தொலைகாட்சியின் ஆளியை நொடிக்கொரு முறை ஆன் செய்வதும் ஆப் செய்வதும் கூடாது.
வீட்டில் மின்சாரம் சேமிக்கப்படுவதன் மூலம் சூழல் பாதுகாக்கப்படுகிறது. அது எப்படி சாத்தியமாகும்? வீட்டில் மின்சார பாவனைக்கும் சூழல் பாதுகாப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்ற யோசனை தவறு.
ஒரு வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப்படும் போது சாதாரண கார்கள் பயன்படுத்தும் போது, வெளிவிடப்படும் காபனீரொட்சைட்டை விட அதிகளவான காபனீரொட்சைட்டு வெளிவிடப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சூரியகலங்களை உபயோகிப்பதன் மூலம் மின்சாரத்தினை உற்பத்தி செய்து கொள்ள முடியும். இதனால் மின்சாரத்தின் மூலம் விரயமாகும் பணத்தினை குறைத்துக்கொள்ள முடியும்.
எனவே மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் உங்களுக்கு தெரியாமலே பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.