தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மூன்று பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இன்று ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று வந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த இருவர், நியூசிலாந்தில் இருந்து வந்த ஒருவர் என மூன்று பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று ஸ்பெயினில் இருந்து வந்த ஒரு பயணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார்.
தமிழகத்திற்கு இதுவரை வெளிநாட்டில் இருந்து தான் கொரோனா தொற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஓமனில் இருந்து வந்த ஒருவர், டெல்லியில் இருந்து வந்த ஒருவர், அயர்லாந்தில் இருந்து வந்த ஒருவர், தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த இருவர், நியூசிலாந்தில் இருந்து வந்த ஒருவர் என 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், இன்று ஸ்பெயினில் இருந்து கொரோனவை ஒருவர் இறக்குமதி செய்துள்ளதன் மூலம் தற்போது மொத்தம் 7 பேர் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஓமனில் இருந்து வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் முழுவதுமாக குணமாகி வீட்டிற்கு திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 6 பேரும் சிகிச்சையிலிருந்து வருவதாகவும், சீரான உடல் நலத்துடன் இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்த ஒருவருக்கு கூட இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஆறுதலான செய்தியாகும்.