கொரோனா பயத்தில் கேரளாவை விட்டு சொந்த ஊருக்கு கிளம்பிய ஏழை தச்சனுக்கு லொட்டரியில் ஒரு கோடி பரிசு விழுந்த நிலையில் திடீர் கோடீஸ்வரனாக மாறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் மிர்சார்பூரை சேர்ந்தவர் ரிஜருல் (30)
தச்சனாக உள்ள ரிஜருலுக்கு உள்ளூரில் வருமானம் குறைவாக கிடைத்ததால் வேலை தேடி கேரளாவுக்கு சில காலத்துக்கு முன்னர் சென்றார்.
அங்கு கடுமையாக உழைத்தால் அவருக்கு தினக்கூலியாக ரூ 1000 கிடைக்கும்.
இந்த சூழலில் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் தனக்கும் கொரோனா வந்துவிடுமோ என பயந்து போன ரிஜருல் சொந்த ஊருக்கு கடந்த வாரம் கனத்த மனதுடன் கிளம்பினார்.
ஏனெனில் கேரளாவில் கிடைக்கும் வருமானம் சொந்த ஊரில் கிடைக்காது என அவருக்கு தெரிந்திருந்தது.
ஆனாலும் உயிருக்கு பயந்து ஊருக்கு சென்றார், அங்கு அவருக்கு சரியான வேலை இல்லாததால் குடும்பமே வறுமையில் வாடியது.
இந்த நிலையில் கிடைத்த வேலையை செய்து வந்த ரிஜருல் அதில் கிடைத்த பணத்தில் லொட்டரி சீட்டுகள் வாங்கினார்.
அதில் அவருக்கு ரூ 1 கோடி பரிசு விழுந்துள்ள நிலையில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
இதையடுத்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ள ரிஜருல் கூறுகையில், இனி தச்சு வேலை செய்ய போவதில்லை, சொந்தமாக தொழில் தொடங்கவுள்ளேன்.
இதோடு புது வீடு கட்டி என் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க லொட்டரி பணத்தை வைத்து ஏற்பாடு செய்வேன் என கூறியுள்ளார்.