கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்லும் இத்தாலியும் நியூயார்க்கும் உலகின் கவனம் ஈர்த்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்து உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளில் இரண்டாவது இடம் பிடித்தது ஆச்சரியத்துக்குரிய விடயம்தான்.
ஒரு காலத்தில் நேரம் பார்ப்பதற்கு கைக்கடிகாரங்களைப் பார்க்கவேண்டாம், சுவிஸ் ரயில்கள் வரும் நேரத்தைப் பார்த்தால் போதும் என்பார்கள்.
அப்படி நேரம் தவறாமை முதலான பல விடயங்களில் உலகை ஆச்சரியப்படுத்திய சுவிட்சர்லாந்து, இன்று உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளில் இரண்டாவது இடம் பிடித்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. சுவிட்சர்லாந்தில், சனிக்கிழமை நிலவரப்படி 758 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, எத்தனை பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்ற கணக்கு வைப்பதற்கு தடுமாறி வருவதாக சுவிஸ் அரசே கூறுகிறதாம்.
ஒரு மில்லியன் குடிமக்களுக்கு 886 பேருக்கு கொரோனா தொற்று என்ற நிலையில், இத்தாலி அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இன்னமும் முதலிடத்திலேயே உள்ளது.
ஒரு மில்லியன் குடிமக்களுக்கு 793பேருக்கு கொரோனா தொற்று என்ற நிலையில், சுவிட்சர்லாந்து அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆனால், இது ஆச்சரியமில்லை என்கிறார்கள் விமர்சகர்கள். காரணம், சுற்றுலாவை முக்கிய தொழிலாக கொண்ட ஐரோப்பிய நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று.
அதுபோக, கொரோனா தொற்று தலை விரித்தாடும் இத்தாலியின் Lombardy பகுதியை ஒட்டியிருக்கும் சுவிஸ் நகரங்களுக்கு, சில தினங்களுக்கு முன்பு வரை நாளொன்றிற்கு 68,000 இத்தாலியர்கள் வரை வந்துபோன விடயம் அனைவரும் அறிந்ததே.
அத்துடன் சுவிஸ் எல்லையை மூட முடிவெடுக்க நாடு தடுமாறியதும் சேர்த்துப் பார்த்தால், இவைதான் சுவிட்சர்லாந்து உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடிக்க காரணமாக அமைந்திருக்கும் என்கிறார்கள் விமர்சகர்கள்.