கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதுடன் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாநிலமான தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்ட எல்லைகளும் நாளை மாலை 6 மணி முதல் ஏனைய அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் வரும் 31ம் தேதி வரை மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் 144 தடையுத்தரவும் போடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்து இயக்கப்படமாட்டாது. அத்தியாவசிய வாகனங்கள் மட்டும் இயக்கப்படும். மளிகைக் கடை, காய்கறிக் கடை, இறைச்சிக் கடை, பால் கடை ஆகியவை மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு என்றால் என்ன?
பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையும், உயிர்சேதம் எதுவும் ஏற்படாத வகையில் தடுப்பதற்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவது தவறு. மீறி அங்கே நபர்கள் கூடி, பொதுமக்களின் அமைதியை பாதிப்படைய செய்தால் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும்.
இச்சட்டத்தின் பிரிவு 141 முதல் 149ன் படி 144 தடை உத்தரவை மீறினால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது தண்டனைத்தொகை விதிக்கப்படும்.