ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இரண்டு மருந்துகளின் கலவையைப் பயன்படுத்தி கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்ததால், அதே மருந்து கலவையை 50 மருத்துவமனைகளில் இருக்கும் மற்ற கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரகசியமாக நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையில் எச்.ஐ.வி க்கான கலேட்ரா மருந்தும் மலேரியா சிகிச்சைக்கான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் இரண்டும் கலந்து கோரோனா பாதித்த நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன.
ஏற்கனவே, இந்த மருந்துகளை சோதனைக் குழாய்களில் கொரோனா வைரஸுக்கு எதிராகப் பரிசோதித்தபோது இந்த கூட்டு மருந்துகள் மிகவும் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து, அடுத்தகட்டமாக, ஒரு நோயாளிகளின் குழுவுக்கு இதே மருந்துகளை கொடுக்கப்பட்டு ரகசியமாக சோதிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த மருந்துகளை உட்கொண்ட நோயாளிகள் அனைவரும் முழுமையாக குணமடைந்தனர்.
இந்த மருந்துக்கலவையை கண்டுபிடித்த ஆய்வுக்குழுவின் முக்கிய அங்கத்தினர், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சி இயக்குநர் மற்றும் ராயல் பிரிஸ்பேன் மற்றும் மகளிர் மருத்துவமனையின் ஆலோசகருமான பேராசிரியர் டேவிட் பேட்டர்சன் தெரிவிக்கையில்,
இந்த கூட்டு மருந்துகள் அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கக்கூடியவை. அடுத்த கட்டமாக ஆஸ்திரேலியாவில் உள்ள 50 மருத்துவமனைகள் இந்த மருந்துகளை அவர்களுடைய நோயாளிகளுக்கு வழங்கி அதை மேலும் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான வழிகளை கண்டறிவர்.
மேலும், ஒரு மருந்தின் செயலாக்கத்திறனை மற்றொரு மருந்தோடு ஒப்பிடுவது மட்டுமல்லாமல், இரண்டு மருந்துகளின் கூட்டுக்கலவையின் செயல்பாட்டையும் ஒப்பிடுகிறோம் என அவர் கூறினார்.
இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் டேவிட் பாட்டர்சன் கூறுகையில்,
நாங்கள் அடுத்தகட்ட சோதனைக்கு செல்லத் தயாராகிவிட்டோம், அடுத்தகட்ட சோதனையில் ஈடுபடுத்தப்படவுள்ள நோயாளிகளை விரைவில் சேர்க்கத் தொடங்கிவிடுவோம். அனேகமாக, இந்த மாத இறுதிக்குள் சோதனைக்கு தேவையான நோயாளிகளை அடையாளம் கண்டுவிடுவோம். பெரியளவில் ஆஸ்திரேலிய நோயாளிகளை பரிசோதிப்பதன் மூலம், ஒரு உலகளவிலான அனுபவத்தை நாங்கள் பெற இயலும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.