ஆப்பிரிக்க மலை கொரில்லாக்கள் உட்பட அழியக்கூடிய நிலையிலிருக்கும் விலங்குகளுக்கும் கொரோனா அபாயம் உள்ளதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், உலகின் ஆப்பிரிக்க மலை கொரில்லாக்களில் மூன்றில் ஒரு பங்கு வாழும் இடமாகிய காங்கோவிலுள்ள விருங்கா தேசிய பூங்கா, ஜூன் மாதம் ஒன்றாம் திகதி வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்க முடிவுசெய்துள்ளது.
கொரில்லாக்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளது என்ற அறிவியலாளர்களின் கூற்றை மேற்கோள் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்களை பாதிக்கக்கூடிய பல சுவாசப் பிரச்சினைகள் கொரில்லா போன்ற குரங்கு வகைகளையும் தாக்கக்கூடும்.
மேலும் சாதாரண ஒரு ஜலதோஷம் கூட கொரில்லவைக் கொன்றுவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.
அதனால்தான், எப்போதுமே கொரில்லாக்களை காண வருவோர் அவற்றிற்கு அருகில் நெருங்க அனுமதிக்கப்படுவதில்லை.
விருங்கா தேசிய பூங்காவின் இந்த முடிவு வன விலங்கு ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கென்ய வன விலங்கு ஆர்வலரான Paula Kahumbu என்பவர் கூறும்போது, உலகில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான மலை கொரில்லாக்களே உள்ள நிலையில், அவற்றை பாதுகாக்க நம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
மனிதர்களைத் தாக்கும் நோய்களால் கொரில்லாக்கள் எளிதில் பாதிக்கப்படும் என்பது நமக்குத் தெரியும்.
வெறும் ஜலதோஷம் உடையவர்களே கொரில்லாக்களை பார்வையிட அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அப்படியிருக்கும்போது, கொரோனா நோயாளிகளில் சிலருக்கு நீண்ட காலத்திற்கு அறிகுறிகளே தோன்றுவதில்லை என்பதால், மனிதர்கள் அவற்றிற்கு எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடமுடியும், ஆகவே இந்த தடை வரவேற்கத்தக்கதுதான் என்கிறார் அவர்.