கொரோனா பீதி காரணமாக கொலம்பியாவில் உள்ள சிறையில் கலவரம் வெடித்தது. அதனை தொடர்ந்து 23 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமாக உள்ளது. அங்கு இந்த கொடிய வைரசால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 231 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி அங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நாடு தழுவிய தனிமைப்படுத்தல் தொடங்குகிறது. இது 19 நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ ஊழியர்கள், பாதுகாப்பு படைகள் மற்றும் பல்பொருள் அங்காடி ஊழியர்களை தவிர்த்து மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மே மாதம் இறுதி வரை வீட்டுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனிடையே அந்த நாட்டில் சிறைகளில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருப்பதோடு, சுகாதார சேவைகளும் மோசமாக இருப்பதால் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அச்சம் நிலவுகிறது.
இதனை கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள 132 சிறைகளில் கைதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள சிறைகளில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.
இந்த நிலையில் தலைநகர் போகோடாவில் உள்ள நாட்டின் மிகப்பெரிய சிறையில் கைதிகள் நடத்திய போராட்டத்தின் போது திடீர் கலவரம் வெடித்தது. இதை பயன்படுத்தி கைதிகள் பலர் சிறையை உடைத்து தப்பி ஓட முயற்சித்தனர்.
இதனால் பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து சிறையில் கலவர தடுப்பு பொலிசார் குவிக்கப்பட்டனர். அவர்களுடன் கைதிகள் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் கைதிகள் 23 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 83 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 30 க்கும் மேற்பட்ட பொலிசாரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள அந்த நாட்டின் நீதித்துறை அமைச்சர் மர்காரிட்டா கேபெல்லோ சிறையில் சுகாதார பிரச்சினைகள் இருப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது என்றும் கைதிகள் கொரோனாவை காரணம் காட்டி கலவரத்தில் ஈடுபட்டு தப்பிக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.