ஸ்பெயின் நாட்டில் மருத்துவ உதவி கிடைக்காமல் கொரோனாவால் இறந்த தந்தையின் சடலத்துடன் மகன் ஒருவர் 16 மணி நேரம் காத்திருந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவை பூர்வீகமாக கொண்ட லூயிஸ் பெர்னாண்டோ என்ற 25 வயது இளைஞரே தமது தந்தையின் சடலத்துடன் அதிகாரிகளின் வருகைக்கு 16 மணி நேரம் காத்திருந்தவர்.
மாட்ரிட் நகரில் குடியிருக்கும் லூயிஸ் பெர்னாண்டோ, ஸ்பெயின் நாட்டு குடிமக்களுக்கும் இதே நிலை என்றால் ஸ்பானிய சுகாதாரத் துறை முடங்கியிருக்கிறது என்றே அர்த்தம் என்கிறார்.
முதலில் தமது அவசர அழைப்புக்கு பதில் தரவே காலதாமதம் செய்தனர் எனக் கூறும் லூயிஸ் பெர்னாண்டோ, மருத்துவ உதவி கிடைக்காமல் தமது தந்தை மரணமடைந்த பின்னர், சடலத்தை கைப்பற்ற நீண்ட 16 மணி நேரம் எடுத்துக் கொண்டனர் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமது தந்தைக்கு அதி உயர் காய்ச்சல் கண்டது என்கிறார் லூயிஸ் பெர்னாண்டோ.
இதனையடுத்து அவசர மருத்துவ உதவிக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார் அவர். இருவருக்கும் அப்போது காய்ச்சல் இருந்துள்ளது.
ஆனால் லூயிசின் தந்தைக்கு மட்டும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளது. உடல் மரத்துப்போய் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளார் லூயிசின் தந்தை.
திங்கள் அன்று முதல் அவர் இருமமும் தொடங்கியுள்ளார். அடுத்த நாள் முதல் மூச்சுத்திணறலால் கடுமையாக அவதிக்கு உள்ளானார்.
அதுவரை அவசர் அழைப்புக்கு எந்த பதிலும் கிடைக்காத நிலையில், லூயிஸ் மீண்டும் அவசர மருத்துவ உதவிக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார்.
ஆனால் இந்த முறை அழைப்பை எடுத்துப் பேசியவர்கள், ஆம்புலன்ஸ் ஒன்றுடன் ஆக்ஸிஜன் போத்தல் ஒன்றையும் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
நாடு முழுவதும் இக்கட்டான சூழல் நிலவுவதால் பொறுமை காத்த லூயிசுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இதனிடையே லூயிசின் தந்தை மருத்துவ உதவி கிடைக்காமல் மரணமடைந்துள்ளார். இந்த நிலையில் மூன்றாவது முறையாக அவசர உதவிக்கு அழைத்து பேசிய லூயிசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
லூயிஸ் தமது தந்தையின் அருகே இருந்து விலகி இருக்க வேண்டும் எனவும், கொரோனா மரணத்தருவாயில் இருப்பவர்களிடம் இருந்து வேகமாக பரவும் என எச்சரித்துள்ளனர்.
ஆனாலும் லூயிஸ் தமது தந்தையின் அருகே இருந்து விலகவில்லை என்பது மட்டுமின்றி நள்ளிரவில் அவரது உயிர் பிரியும் போது லூயிஸ் தமது தந்தையின் அருகேயே இருந்துள்ளார்.
தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும், ஒரு மருத்துவருடன் வந்த பொலிசார், இறப்புச் சான்றிதழை வழங்கி விட்டுச் சென்றார்.
பின்னர் லூயிஸ் மாட்ரிட் நகரத்தின் சார்பாக சடலங்களுக்கு இறுதிச்சடங்கு மேற்கொள்ளும் தனியார் அமைப்பு ஒன்றிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போது அனைத்தும் இலவசம் என்ற போதிலும் அந்த தனியார் நிறுவனம் தம்மிடம் 2700 யூரோ கட்டணமாக வசூலித்ததாகவும், மூன்று தவணைகளாக செலுத்தினால் போதும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இறுதியில் அனைத்தும் ஒப்புக்கொண்ட பின்னர் நீண்ட 16 மணி நேரத்திற்கு பின்னர் சடலத்தை மீட்டு சென்றதாக லூயிஸ் கலங்கிய கண்களுடன் தெரிவித்துள்ளார்.