இந்திய பாடகி கனிகா கபூர் மூலமாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக வெளியான தகவலை பாடகி தரப்பு மறுத்துள்ளது.
லண்டனில் இருந்து மும்பை வந்த பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை மறைத்து, பல பார்ட்டிகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் பாடகி கனிகா கபூர், சுற்றித் திரிந்து, பலருக்கும் கொரோனா வைரஸை பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு, வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், லண்டனில் இருந்து வந்த கனிகா கபூர் தான் இளவரசர் சார்லஸுக்கும் கொரோனா வைரஸை பரப்பி உள்ளார் என்ற செய்தி, புகைப்படத்துடன் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது
ஆனால், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உடன் பாலிவுட் பாடகி கனிகா கபூர் இருக்கும் புகைப்படங்கள், சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் இல்லை என்றும், இவை 2015ம் ஆண்டு எடுத்த பழைய புகைப்படங்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இது வீண் வதந்தி என்றும் கனிகாவுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முறை இசை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றிருந்த கனிகா கபூர், இங்கிலாந்து இளவரசர் சார்லஸை சந்தித்தாரா? இல்லையா? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கனடா பிரதமரின் மனைவி மற்றும் ஹாலிவுட் நடிகர் இத்ரிஸ் எல்பாவுக்கு கொரோனா பரவியது குறிப்பிடத்தக்கது.