கொரோனா தொற்றுள்ளவர்களைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி, பரிசோதித்து சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையை ஆக்ரோஷமாகப் பின்பற்ற வேண்டிய நேரம் இதுவென உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் முழுவதும் வீரியமாக கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் இந்த வைரஸினால் திணறிக் கொண்டிருக்கின்றன.
இது தொடர்பில் தற்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்க பல நாடுகள் லொக் டவுனை அமல்படுத்தியுள்ளது. ஆனால், இந்த நடைமுறைகள் மட்டுமே தொற்று நோயை ஒழிக்க போதுமானதாகாது. எனவே கொரோனா வைரஸைத் தாக்கி அழியுங்கள் என்று அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
நாங்கள்தான் அனைத்து நாடுகளையும் லொக் டவுன் செய்யக் கோரினோம். ஆனால், இந்தக் காலகட்டத்தை கொரோனாவைத் தாக்கி அழிக்கப் பயன்படுத்துங்கள் என்று இப்போது அழைப்பு விடுக்கிறோம். இரண்டாவது யன்னலை திறந்திருக்கிறோம். ஆனால், இதனைப் பயனுள்ள வகையில் நாம் உபயோகப்படுத்திக் கொள்வது அவசியம்.
கொரோனா தொற்றுள்ளவர்களைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி, பரிசோதித்து சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையை ஆக்ரோஷமாகப் பின்பற்ற வேண்டிய நேரம். ஆகவே லொக் டவுன் காலகட்டத்தை கொரோனோவைத் தாக்கி அழிக்க வேண்டிய காலகட்டமாக மாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.