நைஜீரியா நாட்டின் தென்பகுதியில் அக்வா இபோம் என்ற மாநிலம் உள்ளது. இந்த மாநில தலைநகரான உயோ என்ற இடத்தில் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது.
இந்த தேவாலயத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்காக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அந்த திருச்சபையின் நிறுவனரான அகான் வீக்ஸ் என்பவருக்கு பிஷப் பட்டம் வழங்கும் விழா நேற்று இங்கு நடைபெற்றது.
இந்த விழாவைக்காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்திருந்தனர். மாநில கவர்னர் உடோம் எம்மானுவேல் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்ற இவ்விழாவின்போது, தேவாலய கட்டிடத்தின் மேற்கூரையை தாங்கிப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சரிந்து விழுந்தன.
இதையடுத்து, சரியாக காயாமல் இருந்த மேற்கூரை மொத்தமும் கூடியிருந்த மக்களின்மீது விழுந்தது. சில நொடிகளில் அந்த இடம் மண்மேடாகிப் போனது.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய பலரை மீட்டு, ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மீட்புப்பணி முழுமையாக முடிவடையாத நிலையில் இதுவரை 160 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக மாநில கவர்னரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.