12-12-1950 அன்று பிறந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ ஆகியோரின் மறைவையடுத்து, தனது பிறந்தநாளை இந்த ஆண்டு கொண்டாடப் போவதில்லை என்று சமீபத்தில் அறிவித்திருந்தார். வழக்கம்போல், பெரிய விழாவாக கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களையும் அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், இன்று 66-வது பிறந்தநாள் காணும் ரஜினிகாந்துக்கு பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று பிறந்தநாள் காணும் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடனும் மனமகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன் என அமிதாப் பச்சன் வாழ்த்தியுள்ளார்.
நமது சூப்பர் ஸ்டார்களுக்கு எல்லாம் நட்சத்திர மண்டலமாக இருக்கும் அன்புக்குரிய ரஜினி சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என அவருடன் 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்ஷய் குமார் வாழ்த்தியுள்ளார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா!, உங்கள் நடிப்பின் மூலம் எங்களை பலகாலம் மகிழ்விக்க நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்திருக்க வேண்டுகிறேன் என ஷாருக்கான் வாழ்த்தியுள்ளார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா!, என்று அபிஷேக் பச்சனும் வாழ்த்தியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!, எங்களுக்கு நீங்கள் கடவுள் கொடுத்த வரம், தன்னடக்கம் மற்றும் வெற்றிக்கான நவீனக்கால மரபாக உங்களது வாழ்க்கைப் பயணம் தொடரட்டும் என நடிகர் அனுபம் கெர் குறிப்பிட்டுள்ளார்.