பெல்ஜியம் நாட்டில் பூனை ஒன்றிற்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தி வருகின்றது.
ஏற்கெனவே ஹாங்காங்கில் மனிதர்களிடம் இருந்து 2 நாய்களுக்கு பரவிய நிலையில் தற்போது பெல்ஜியத்தில் பூனைக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெல்ஜியம் நாட்டில் தேசிய சுகாதாரத்துறையின் வைரஸ் நோய்களின் பிரிவு தலைவர் இது தொடர்பாக கூறுகையில், ஒரு வாரத்திற்க்கு முன்பு கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட பெண் ஒருவரின் செல்ல பிராணியாக அந்த பூனை இருந்து வந்ததாகவும், இப்போது அந்த பூனைக்கும் கொரோனாவின் அறிகுறிகளான சுவாச பிரச்சனை, வயிற்று போக்கு, வாந்தி ஆகியவை ஏற்பட்டதாகவும், பின்னர் அந்த பூனைக்கு கொரோனா பரிசோதனை செய்த போது சோதனை முடிவில் அதற்கு கொரோனா தொற்று காணப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனாலும் இது போன்ற மிக அரிய சம்பவங்களை கொண்டு கொரோனா மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவுவதை பொதுவான ஒரு சம்பவமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் விலங்குகள் மூலம் இதுவரை கொரோனா மனிதர்களுக்கு பரவவில்லை. இதுவரை அவ்வாறு அபாயம் எங்கும் நடக்கவில்லை என்றாலும் மக்கள் தங்கள் விலங்குகளை அவற்றின் பாதுகாப்புக்காக எப்போதும் கவனித்து வர வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். முன்னதாக, உலக சுகாதார அமைப்பு நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளை கொரோனா வைரஸ் தாக்காது என்று கூறிய நிலையில், சமீபத்தில் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர்.
இருப்பினும், தற்போது வரை செல்லப் பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.