இலங்கையில் அண்மைக்காலமாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
முஸ்லிம் சமய, கலாசார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழா வைபவங்கள் இன்று ஊவா மாகாணத்தின் குருத்தலாவையில் நடைபெற்றது.
இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்தனர்.
அவ்வாறான நிலையிலும் சிறுபான்மை மக்கள் துணிச்சலுடன் முன்வந்து வாக்களித்த காரணத்தினாலேயே ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. நல்லாட்சி மலர்ந்தது.
இந்நிலையில் சிறுபான்மை மக்கள் மீதான அச்சுறுத்தல்கள் நல்லாட்சியிலும் தொடர எந்த வகையிலும் இடமளிக்க முடியாது. மிக விரைவில் இதற்கு தீர்வு காணப்படும்.
சிறுபான்மை மக்கள் பயம், அச்சமின்றி நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றும்.
அரசாங்கத்தின் மீதான சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் அச்சுறுத்தலான செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.
அத்துடன் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய, கலாசார விவகாரங்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பில் முன்வைத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு தொடக்கம் இதுவரை மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவில்லை என்பதுடன், இது தொடர்பில் பல்வேறு சமூக அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் ராஜதந்திரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.