ஸ்ரீலங்காவிலும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து மருத்துவர்களும் அதிகாரிகளும் கடுமையாக போராடி வரும் சூழ்நிலையில் அவர்களுக்கு உதவும் முகமாக ஒரு ரோபோ வைத்தியரை பத்தாம் வகுப்பு மாணவன் உருவாக்கியிருக்கிறான்.
தேஜன தேவ்மின என்ற இந்த பள்ளிக்கூட மாணவன் இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய ஜனாதிபதி கல்லூரியின் 10 ஆம் ஆண்டில் கல்வி பயில்கிறான்.
இது தாடர்பில் அவர் கூறுகையில்,
“கொரோனா வைரஸை முதலில் இனம் கண்டுக்கொண்ட சீனாவின் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த வைரஸின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதனை எம்மால் உணர முடியும்.
சிறந்த அறிவையும் திறமையையும் கொண்ட ஒரு வைத்தியரே கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டு மரணித்தார்.
இலங்கையை நாம் எடுத்துக்கொண்டாலும் இங்கும் பல அறிவுமிக்க சிறந்த வைத்தியர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற பாடுபடுகிறார்கள். அவ்வாறான ஒரு வைத்தியரை நாம் இழந்து விட்டால் அது எமது சுகாதார சேவையை வெகுவாக பாதிக்கும்.
எனவே நான் நினைத்தேன், இந்த அனர்த்தத்தில் இருந்து எமது வைத்தியர்களையும் தாதியர்களையும் காப்பாற்றுவது எவ்வாறு என்று. அதன் அடிப்படையிலேயே இந்த வைத்தியர் ரோபோவை நான் உருவாக்க நினைத்தேன்.
இதன் மூலம் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு உள்ள நோய் தொற்று அவதானத்தில் இருந்து சற்றேனும் அவர்களை காப்பாற்ற முடியும் என்பது எனது நோக்கமாகும்” என்றான்.