கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து குடிமக்களும் பங்கேற்க வேண்டும் என பொலிசார் அழைப்பு விடுத்துள்ளனர். சில நபர்களின் பொறுப்பற்ற நடத்தை காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தாமதம் நிகழ்வதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹான தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் பலர் இன்றும் தங்களை பதிவு செய்யவில்லையென்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து மார்ச் 16 முதல் 19 ஆம் திகதி வரை இலங்கைக்கு வந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக பொலிசாரிடம் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதிவுக்கான காலஅவகாசம் இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைகிறது.
இந்த கால எல்லைக்குள் தம்மை பதிவு செய்யாமல், தலைமறைவாக உள்ள வெளிநாட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையை பொலிசார், இராணுவத்தினர், புலனாய்வு பிரிவினர் இணைந்து மேற்கொள்ளவுள்ளனர்.
தம்மை பதிவு செய்யாமல் தலைமறைவாக இருப்பவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதுடன், அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படுமென அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.